கம்ப்யூட்டர் தமிழ் கட்டுரை உருவாக்க வேண்டும்
உயர்கல்வி மாணவர்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பான கட்டுரைகளை உருவாக்க வேண்டும்,'' என, தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசினார்.தமிழ் இணைய மாநாடு முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கொடிசியா வளாகத்தில் நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
தமிழ் இணைய மாநாடு குழுத்தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:சீனா மற்றும் கொரியா நாடுகளில் விற்பனை செய்யப்படும் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும், அந்நாட்டு மொழியில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சீன, கொரிய மொழி சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்ய அந்நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் தமிழ் சாப்ட்வேர் உள்ள கம்ப்யூட்டர்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.செயல்முறை கல்வி கற்பிப்பதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் போதே, சமூக சேவை மீதான ஆர்வத்தையும் கம்ப்யூட்டர் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கும் உயர்கல்வி மாணவர்கள், குறைந்தது 10 ஆயிரம் கட்டுரைகளையாவது "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பாக உருவாக்கி தமிழ் முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கப்படும் புதிய செம்மொழி உயராய்வு அலுவலகத்தில், இணைய தமிழுக்கான முழுநேர செயலகமும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அனந்தகிருஷ்ணன் பேசினார்.