Thursday, June 3, 2010

தினமணி - 3 ஜூன் 2010

செம்மொழி மாநாடு: இணைய மாநாடு:இலவச அனுமதி


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் இணைய மாநாட்டில் அனிமேஷன் துறை சார்பாக 10 அரங்குகள், தமிழ் விக்கிபீடியா தகவல் களஞ்சியம் தொடர்பாக 5 அரங்குகள் என மொத்தம் 123 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஜூன் 15-ம் தேதியில் இருந்து 18-ம் தேதிக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இணையதளத்தில் தமிழ் மொழி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தலைப்புகளில் உள்நாட்டு-வெளிநாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என பலர் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்கின்றனர்.  மாநாட்டின் முக்கிய நிகழ்வாக தமிழ் கணினி கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் 123 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து அரங்குகளும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இண்டர்நெட் வசதியுடன் சுமார் 200 முதல் 300 கணினிகள் வைக்கப்படுகின்றன.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் இணையதளத்தின் மூலம் மக்களைச் சென்றடைவது தொடர்பான விவரங்கள் செயல்விளக்கமாக, கணினியில் திரையிட்டு காண்பிக்கப்படும்.

கணினி கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் இணைய மாநாட்டுக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் விக்கிபீடியா சார்பில் 5 அரங்குகளும், அனிமேஷன் துறையில் 10 அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் கணினி கண்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம். அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரான

பி.டபிள்யூ.சி.டேவிதார் தெரிவித்தார்.