சென்னை, ஜூன்.18: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வரைகலை மற்றும் அசைகலைப் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் 8300 மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.
இப்போட்டிகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் மொத்தம் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆர்வம் அதிகரிக்க உதவியாக தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றன. போட்டியில் இடம்பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் ஒன்பது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.