*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'*
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம்
கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது.
கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ'
பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இணைய மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய போட்டிகள் நடத்தி
முடிக்கப்பட்டுள்ளன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம்
மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்கம், பத்திரிகையாளர்களுக்கான அரங்கம், பொது
தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள்
நிறுவப்படுகின்றன.
மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை
வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும், இணைய
மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தை
வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.
இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல்,
தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இணையதள இணைப்பு, அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
நன்றி:- தினமணி