Thursday, April 1, 2010

தினத்தந்தி - 1 ஏப்ரல் 2010


“உலகத்தமிழ் இணைய மாநாடு: கல்லூரி மாணவர்களுக்கு இணையதள பக்கம் வடிவமைக்கும் போட்டி” என்ற தலைப்பில் இன்று வந்த தினத்தந்தி செய்தியை இங்கே காணலாம்.



உலகத்தமிழ் இணைய மாநாடு: கல்லூரி மாணவர்களுக்கு இணையதள பக்கம் வடிவமைக்கும் போட்டி 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.1-

கோவை உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இணையதள பக்கம் (வெப்பேஜ்) வடிவமைக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

உலகத்தமிழ் இணைய மாநாடு

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, உலகத்தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்த இணைய மாநாடு, தமிழ் மற்றும் கணினியில் தமிழின் வளர்ச்சி, அவற்றில் உள்ள வருங்கால வாய்ப்பு, இளைய தலைமுறையினருக்கு தமிழ் இணைய ஈடுபாட்டை வளர்ப்பது போன்ற கருத்துக்களை மையமாக கொண்டு அமைக்கப்படவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கம்ப்ïட்டர் வரைகலை மற்றும் அனிமேஷன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு போட்டி நடத்தப்படவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டுக்குழுவின் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம், உலகத்தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, கவிஞர் கனிமொழி எம்.பி, மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தகவல்-தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார், எல்காட் மேலாண் இயக்குனர் சந்தோஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள.

இந்த கூட்டத்தின் முடிவில் மு.ஆனந்தகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழில் இணையபக்கம் குறைவாக.....

``உலகத்தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தியதைப் போலவே, கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு போட்டியை நடத்தவிருக்கிறோம். இதில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், பிசியோதெரபி, சித்தா, பல் மருத்துவம், நர்சிங், பாலிடெக்னிக் கால்நடை அறிவியல் உள்ளிட்ட 13வித கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இணையதளத்தில், விக்கிபீடியா என்னும் தகவல் களஞ்சிய பக்கம் (வெப் பேஜ்) உள்ளது. இது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 32 லட்சம் தகவல் பதிவுகள் உள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக இந்தியில் 68 ஆயிரம் பக்கங்களும், தெலுங்கில் 44 ஆயிரம் பக்கங்களும், தமிழில் 22 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே உள்ளன. இதனை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்லூரி மாணவர்களுக்கு இப்போது போட்டி நடத்தப்படுகிறது.

போட்டி எப்படி?

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (ஷ்ஷ்ஷ்.åணீனீவீறீவீஸீå2010.åஸீ.ரீஷீஸ்.வீஸீ.) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு

``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `ïனிகோட்' எழுத்துறுவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துறு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துறுவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. ïனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.

அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.