Sunday, March 7, 2010

தினமணி சென்னை - 7 மார்ச்சு 2010

"விக்கிபீடியா" தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி*

தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள்
ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.

இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது.

ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது: கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது.

விக்கிபீடியா" தமிழ் இணையதளம்:
எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா" இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

ஆனால், "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால் தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும்.

அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். இந்தக் கட்டுரைகள் அனைத்தும்  "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் பதிவு
செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

கட்டுரைகளை "யுனிகோட்" முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.


நன்றி:- தினமணி